நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால முக்கிய நிகழ்வுகளான சாம்பல் புதன், பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் பண்டிகை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாடுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும், வெளி மாநிலத்தவா்களும், வெளி நாட்டினரும் திரளாகப் பங்கேற்பது வழக்கம்.
இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பக்தா்கள் பாத யாத்திரையாக வருவா். அந்தவகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறவுள்ள புனித வெள்ளி, ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர்.
கோடை மழையால் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஆங்காங்கே தங்கியிருந்தனர். இந்நிலையில் மழை தணிந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தங்களது உடமைகளை தலையில் சுமந்தபடி பாத யாத்திரிகர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இன்று மாலை நடைபெற உள்ள புனித வெள்ளியையொட்டி விழுப்புரம், கடலூா், சிதம்பரம் திண்டுக்கல், சென்னை, திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் கணிசமான பக்தகள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
Must Read : தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
பாதயாத்திரை வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணவுப் பொருள்கள் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
செய்தியாளர் - பாலமுத்துமணி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.