நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் மூதாட்டிக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் அதிர்ச்சி

Youtube Video

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மூதாட்டி ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரியை சேர்ந்த அலமேலு என்ற 70 வயதான மூதாட்டி திங்கட்கிழமை அன்று அதேபகுதியில் உள்ள சரபோஜிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பிறகு மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

    அதேநேரத்தில் ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் பெண்களையும் அந்த வரிசையில் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த மூதாட்டியையும் கூட்டத்தோடு கூட்டமாக செவிலியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு மூதாட்டிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு வீட்டிற்கு திரும்பிய மூதாட்டி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டது பற்றி மகனிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகன் தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, மூதாட்டி அலமேலுவிற்கு ஒரே நாளில் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டது உறுதியானது. அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேர தொடர் கண்காணிப்பிற்கு பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் விஜயகுமார், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்திய அலுவலர் மற்றும் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதல் கட்ட விசாரணையில் சரபோஜிராஜபுரம் பள்ளிக்கு தடுப்பூசி போட வந்தவர்களின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு பின்னர் இறுதியாக இணையதளத்தில் பதிவேற்றியதும், இதனால் மூதாட்டி முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல் அறியாமல் சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
    Published by:Karthick S
    First published: