சாலை விபத்தில் பள்ளி மாணவி இறந்துவிட, அவரை அழைத்துச் சென்ற உறவினர், மாணவியின் மரணத்திற்கு தானே காரணம் என்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூக்கார தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி. இவர் நேற்று காலை தனது உறவினர் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அப்போது தெற்குப்பொய்கை நல்லூர், கிழக்குக் கடற்கரைச் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி மகரஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் வீரமணி கண்முன்னே மகரஜோதி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சம்பவத்தை தாங்கிக்கொள்ள முடியாத வீரமணி விபத்து குறித்து அடிக்கடி பேசி புலம்பியபடியே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தெற்கு பொய்கை நல்லூர் அருகே மண்டுவாக்கரை சவுக்குத்தோப்பில் மன உளைச்சலில் இருந்த வீரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த வீரமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை அருகே பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரை அழைத்து சென்ற உறவினரும் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.