'மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்' - சீமான்

'மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்' - சீமான்

சீமான் | மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நினைப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி கணக்குகள், தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைப்பது என அரசியல் கட்சியினர் காய்நகர்த்தி வரும் நிலையில் இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சீமான் அறிவித்திருந்தார்.

  இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வா.உ.சி.யின் 84-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழர் கட்சிக்கு தான் விளம்பரம் கிட்டும். பாஜகவிற்கு அல்ல எனக் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

  மேலும் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தயாராகி வருவதாக கூறினார், ஏங்கு போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள், நானும் அதையே நினைக்கிறேன்" என்றார்.

  இந்த முறை காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார்.

  ஆனால் அதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கி அசத்தினார். அத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் 5,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது நாம் தமிழர் கட்சி.

  கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தை கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றினர்.
  Published by:Sheik Hanifah
  First published: