கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்.
ஐம்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தனியார் பெருமருத்துவமனைகளில் உயர்தரமான மருத்துவம் பெறுகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. இதிலிருந்தே அரசு மருத்துவமனைகளின் தரம் எந்த அளவில் உள்ளது என்பது நன்கு விளங்கும்.
கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணம்!https://t.co/e82Zggi1UP@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/5j9XkDV5NE
— சீமான் (@SeemanOfficial) November 15, 2022
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது.
இதையும் படிங்க: 'கவலைபடாதீங்க.. மீண்டு வருவேன்' - உயிரிழந்த மாணவியின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்ட்ஸ்.. கலங்கும் நண்பர்கள்!
பிரியா தலைநகர் சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதால் செய்தி ஊடகங்களின் மூலம் அவரது மரணமும், அரசு மருத்துவமனைகளின் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழும் குரலற்ற கிராமப்புற ஏழை மக்களின் மரண ஓலங்கள் அரசின் செவிகளை வந்தடையாமலே அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே எதார்த்த உண்மையாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு இனியும் பிரியாவிற்கு நேர்ந்தது போன்று, அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க மேண்டும். மேலும், தவறான அறுவை சிகிச்சையால் பிரியா உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழந்த மகள் பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt hospitals, Seeman