கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுனில் வெற்றிபெற்றுள்ளார்.
தமிழகத்திலுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. காலையிலிருந்து நடைபெற்றுவரும் இந்த வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அ.தி.மு.க கூட்டணி 926 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 1078 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும். 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை உருவாக்கிய அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் 232 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினர்.
எந்த தொகுதிகளிலும் வெற்றி கிடைக்காத நிலையில் 1 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போதிலிருந்து தொடர்ந்து நடைபெற்று இடைத்தேர்தல்கள் உள்பட அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுவருகிறது. இந்தநிலையில், முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நாளை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.