Home /News /tamil-nadu /

ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல்! – சீமான் கண்டனம்

ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல்! – சீமான் கண்டனம்

சீமான்

சீமான்

Naam Tamilar Katchi | Seeman |

  டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர்களுக்கான பணிநியமனத்திலும், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் பணிநியமனத்திலும் ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல்  என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  தெரிவித்துள்ளார்.

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வகுப்புவாரிப்பிரநிதித்துவம் முழுமையாகக் கடைபிடிக்கப்படாததால், பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்களுக்கான இடஒதுக்கீட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். சமூக நீதி ஆட்சியென்று மார்தட்டிக்கொண்டு ஆதித்தொல்குடிகளுக்கான பிரநிதித்துவத்தில் முறைகேடு செய்து, வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவற்றில் பணிபுரிவதற்காக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் பணிப்பிரிவில் தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் முறையான நியமனம் நடைபெறாததினால், ஆதித்தமிழ் குடிகளுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பிரதிநிதித்துவம் முழுமையாகக் கிடைக்கப்பெறாதது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடலாகும். உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 201 அரசு வழக்கறிஞர்கள் பட்டியலில் 6 பேர் மட்டுமே பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி சமூகத்தவர்கள் என்பதிலிருந்தே, இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில் நிகழ்ந்துள்ள மிகப்பெரும் முறைகேடு அம்பலமாகிறது.

  45 நாட்களுக்கு மேல், நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நடைபெறும் எந்தவொரு பணிநியமனமும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் நடைபெற வேண்டுமென்ற அடிப்படை வழிகாட்டு விதிமுறையை கடைப்பிடிக்கத் தவறியுள்ளதோடு, அரசு வரிப்பணத்திலிருந்து ஊதியம் அளிக்கும் நியமனங்கள் யாவும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனும் உச்சநீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு சனநாயக மாண்புகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கியுள்ளது திமுக அரசு.

  Also Read : குடியரசு தலைவராக உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறதே? கையெடுத்து கும்பிட்ட தமிழிசை!

  கடைக்கோடி மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடிய நீதிபரிபாலன அமைப்பு முறைகளில் பணிசெய்யும் வழக்கறிஞர்கள் நியமனத்தில் எவ்வித அரசியல் தலையீடும், அதிகார அத்துமீறலும் இல்லாதிருப்பதே சனநாயகத்தை உயிர்ப்போடு இருக்கச்செய்திடும் எனும் பொறுப்புணர்வும், கடமையுணர்வுமற்று அதற்கெதிராக நடந்தேறியுள்ள இத்தகைய எதேச்சதிகாரப்போக்குகளும், அதிகார முறைகேடுகளும் எதன்பொருட்டும் ஏற்க முடியாத சனநாயகப்படுகொலையாகும். அதேபோல, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, உதவிப்பேராசிரியர்களுக்கான நியமனத்திலும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.

  68 உதவிப்பேராசிரியர்களுக்கான பணிவாய்ப்பில் ஒருஇடம்கூட பழங்குடி சமூகத்தவருக்கு வழங்கப்படவில்லையென்பதும், 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் நிலையிலும் பழங்குடி சமூக மக்களுக்கு வழங்க வேண்டிய 1 விழுக்காடு பிரதிநிதித்துவமும் மறுக்கப்படுகிறதென்பதும் சமூக அநீதியாகும்.

  ஆகவே, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நியமனத்திலும், டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உதவிப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி சமூகத்தவர்களுக்கு உரித்தான முழுமையானப் பிரதிநிதித்துவத்தை வழங்கி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published:

  Tags: MK Stalin, Naam Tamilar katchi, Seeman

  அடுத்த செய்தி