தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் உண்மையில் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மறுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
அதுமட்டுமின்றி டாஸ்மாக் பார்கள் இரவு 10 மணிக்கே மூடப்படுவதால், நள்ளிரவில் குடிப்பவர்கள் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமர்ந்து குடிப்பதாகவும் அதனை தடுத்து பொதுமக்கள் நலன்காக்க பார்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கில், பார்களை 24 மணிநேரமும் திறக்க பரிசீலிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாமல் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற நீதியரசர்களின் கேள்விக்கும் தமிழ்நாடு அரசிடம் உரிய பதில் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை. அதிகாலை 6 மணிக்கே மதுக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை காண்பது, சாதாரண காட்சியாக கடந்துபோக முடியவில்லை. பள்ளிக் கல்லூரி மாணவர்களும், மாணவியர்களும் குடித்துவிட்டு சீருடையுடன் போதையில் தள்ளாடும் காணொளிகள் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இலக்கு வைத்து 24 மணி நேரமும் முழுவீச்சில் மதுவிற்பனை நடைபெறும் மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்? தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான். குடும்பங்கள் சீரழியவும், குழந்தைகளின் கல்வி தடைபடவும், இளம்விதவைகள் உருவாகவும் மதுக்கடைகள்தான் காரணமாகவுள்ளது.
ஆனால், இளைய தலைமுறை அழிந்தாலும் பரவாயில்லை, தமிழ்க் குடும்பங்கள் சிதைந்தாலும் பரவாயில்லை அரசின் வருவாய் மட்டுமே முக்கியம் என்று திமுக அரசு நினைப்பது, அண்ணா அவர்கள் கூறியதுபோல் தொழுநோயாளியின் கையில் வழியும் வெண்ணெயே அன்றி வேறில்லை.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று அறிவித்த திமுக, தற்போது அதுகுறித்து வாய்திறவாமல் இருப்பது ஏன்?. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனை நடைபெறுவது குறித்து சட்டப்பேரவைவரை போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கிலோ கஞ்சா விற்பனையை இதுவரை தடுக்காதது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா விற்பனையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிநிற்கிறது. குட்கா, கஞ்சா போன்றவை போதைப்பொருட்கள் என்று தெரிந்த திமுக அரசுக்கு, டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருளாக தெரியாமல் புனித தீர்த்தமாக தெரிவது ஏன்? என்ற கேள்விக்கும் இன்றுவரை பதிலில்லை.
ஆகவே, திமுக அரசு இனியாவது மக்கள் நலத்தில் அக்கறைகொண்டு மதுக்கடைகளையும், பார்களையும் 24 மணிநேரமும் இயங்கச்செய்யும் முயற்சியை கைவிட்டு, உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Naam Tamilar katchi, Seeman