உத்தரப்பிரதேசத்தில் விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் மகிந்த ராஜபக்சேவின் மகனும் இலங்கையின் அமைச்சருமான நாமல் ராஜபக்சேவை அழைத்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர் நாமல் ராஜபக்சே இந்தியாவுக்கு அழைத்திருப்பதற்கு சீமான கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு இரண்டு இலட்சம் தமிழர்களை ஈழத்தில் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவினுடைய மகனும், இலங்கையின் அமைச்சருமான நாமல் ராஜபக்சேவை அழைத்திருப்பது உலககெங்கும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பையும், கடும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மகிந்தா ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளியெனவும், இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதித்து, அந்நாட்டுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டுமெனவும் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சூழலில் அதனைத் துளியும் மதியாது இலங்கையுடன் நட்புறவுப் பாராட்டுவதும், சிங்கள ஆட்சியாளர்களை விருந்தினராக உபசரிப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்தியாவுக்கெதிரான சீனாவுக்கு வாசல்திறந்துவிட்டதோடு மட்டுமல்லாது, ‘ஆசியாவின் எழுச்சியை சீனாவால்தான் ஏற்படுத்த முடியும்’ என வெளிப்படையாக நிலைப்பாட்டை எடுத்து சீனாவின் பக்கம் நிற்கும் இலங்கை நாட்டின் ஆட்சியாளர்களை பாஜக அரசு ஆதரித்து அரவணைப்பது வெட்கக்கேடானது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணை சிங்களக்கடற்படைக் கொன்றொழித்து முழுமையாக ஒருநாளைக்கூட கடக்காத நிலையில், இரு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தற்போதையச் சூழலில் துளியும் வெட்கமின்றி அந்நாட்டு அமைச்சரை அழைத்து உபசரிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் ஈனத்தனமான இழி அரசியலாகும். இது வரிசெலுத்தி, வாக்குச்செலுத்தி இந்தியாவைத் தங்கள் நாடென்று கருதி வரும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாஜக அரசு செய்த பச்சைத்துரோகமாகும்.
தமிழர்களுக்கெதிராக மிகப்பெரும் அநீதி இழைக்கப்படும் வேளையிலும் தமிழகத்தை ஆளும் திமுக அரசு, எவ்வித எதிர்வினையுமாற்றாது அமைதி காப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. மாநிலத்தன்னுரிமை, தன்னாட்சி என்றெல்லாம் முழங்கிவிட்டு, ஒன்றிய அரசின் இக்கொடுங்கோல்போக்கு குறித்து வாய்திறக்கவே முதுகெலும்பற்று நிற்பது அவமானகரமானது.
எட்டுகோடி தமிழர்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக சிங்களர்களோடு உறவுகொண்டாடும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல், இந்தியா எனும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பின் மீதே தமிழ் இளந்தலைமுறையினருக்கு ஆறாத காயத்தையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்தும் பேராபத்தாக முடியும். தமிழர்களைத் தொடர்ச்சியாகச் சீண்டிவரும் ஒன்றிய பாஜக அரசின் படுபாதகச்செயலினாலும், நயவஞ்சகப்போக்கினாலும் இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் கட்டாயம் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்” எனத் அதில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airport, Mahinda Rajapakse, Naam Tamilar katchi, Seeman, Uttar pradesh