சாட்டை துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் மீது குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழகர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளிவந்துவிடக்கூடாது என்ற குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும். தம்பி துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தைச் சகிக்க முடியாது, சிறைதண்டனை மூலம், அவரை உளவியலாக அச்சுறுத்தி முடக்க நினைக்கும் திமுக அரசின் கொடுங்கோன்மைபோக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
மாற்றுக்கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்பவரை, ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அதிகார அத்துமீறலுக்கு எதிராகவும் அறத்தின் பக்கம் நின்று குரல் எழுப்புவோரையும் தொடர் சிறைவாசம் மூலமாகச் சித்ரவதை செய்து, தனக்கு எதிராக எவ்வித எதிர்க்கருத்தும் எழவேக்கூடாது என்கின்ற ஆளும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையால், சனநாயக மாண்புகளும், கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறது.
சனநாயக விழுமியங்களின் மீது பற்றுறுதி கொண்டவர்கள் கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் இதுபோன்ற கொடுங்கோல்போக்கினை எதிர்த்துப்போராட எதிராகக் குரல் கொடுக்க அணிதிரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.