ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எங்க வழி தனி வழி... முதல் ஆளாக 234 வேட்பாளர்களையும் அறிவிக்கும் சீமான்!

எங்க வழி தனி வழி... முதல் ஆளாக 234 வேட்பாளர்களையும் அறிவிக்கும் சீமான்!

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் முதல் ஆளாக ஒரே மேடையில் சீமான் அறிவிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும், வேட்பாளர்களை முடிவு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்து 234 வேட்பாளர்களையும் முதல் ஆளாக அறிவிக்க இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அதில் 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களும் இடம்பெறுகின்றனர். சீமான் திருவெற்றியூர் அல்லது காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்கிறார்.

வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டுக் காலத்தில் இந்நிலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது.

தனது தனித்துவமிக்க முன்னுதாரணமான முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி, அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்கவியலா பேருண்மை. எங்களது முன்னோர்களும், இந்நிலத்தில் இதற்கு முன்பாக மாற்று அரசியல் முழக்கத்தை முன்வைத்தவர்களும் சமரசங்களுக்கு ஆட்பட்டு, திராவிடக்கட்சிகளிடம் கரைந்துபோன வரலாற்றுத்தவறுகளிலிருந்து பாடம் கற்ற நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அதனைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதிபூண்டு, சமரசமின்றி திமுக, அதிமுக எனும் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்துக் களம் காண்கிறது. மண்ணுரிமைக் களத்தில் தளர்வின்றிப் போராடுகிறது. பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்க ஓய்வின்றிக் களத்தில் நிற்கிறது.

2010ல் கட்சி தொடங்கியபோதும் மக்களுக்கான களத்தில் நின்று மக்களுக்கானவர்கள் என நிரூபித்துவிட்டே, 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாகக் களம்கண்டது நாம் தமிழர் கட்சி. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்தி, சமூக நீதியை உறுதிசெய்யும் விதத்தில் தனித்தொகுதிகளில் ஆதித்தொல் குடிகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது, இதுவரை தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்தது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது.

வாக்கரசியலுக்காக வேலை செய்திடாது, நாளைய தலைமுறையினருக்கான மாற்று அரசியலை முன்வைத்து சமூகக்கடமையாற்றியது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கிப் பாலியல் பேதம் முறித்து நின்றது. இந்தியப் பெருநிலத்திலேயே பாலியல் வேறுபாட்டைத் தகர்த்து, பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்பளித்த கட்சியாக வரலாற்றில் பதிவுசெய்தது நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு முன்மாதிரியான அரசியலை முன்வைத்து, முற்போக்கை முழுவதுமாகக் கடைபிடித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை கட்டியெழுப்புகிற நாம் தமிழர் கட்சியின் அடுத்தக் கட்டப்பாய்ச்சலாக, அதிகாரத்தை அடையும் பெரும்போரில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை சமரசமின்றி எதிர்கொண்டு தனித்து சமர்க்களம் புகுகிறது நாம் தமிழர் கட்சி.

தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது.

ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Naam Tamilar katchi, Seeman, TN Assembly Election 2021