மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் ஒப்பந்தம் போட்டது போல, இன்னொரு மடத்திலும் மடாதிபதியாவதற்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் இந்த மடத்தின் மடாதிபதி, நித்யானந்தா நிச்சயம் வருவார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். சொர்க்கபுர ஆதீனத்தில் நடந்தது என்ன?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சொர்க்கபுர ஆதீனத்தில் அடுத்த மடாதிபதி நித்யானந்தா தான் என ஒப்பந்த பத்திரம் போட்டுள்ளார் அந்த மடத்தின் தற்போதைய மடாதிபதி தண்டபாணி தேசிகர். இதற்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் நித்யானந்தா. பணத்திற்காக மடாதிபதி பொறுப்பை விற்க முடியுமா? சட்டம் சொல்வதென்ன?
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே பண்டாரவாடை திருமாகாளம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் தற்போது திருமாளம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் சொர்க்கபுர ஆதீனம் உள்ளது. 18ம் நுாற்றாண்டில், தருமபுர ஆதீனத்தின் சீடராக இருந்த அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் என்பவரால் இந்த ஆதீனம் உருவாக்கப்பட்டது. அவருக்குப் பின் 200 ஆண்டுகள் துறவிகள் இந்த மடத்தில் மடாதிபதியாக இருந்து வந்துள்ளனர்
இறுதியாக, 1964ம் ஆண்டு, சிவப்பிரகாச தேசிகர் என்பவர் இந்த மடத்தின் கடைசி மடாதிபதியாக இருந்துள்ளார். அவரது மகன், மடத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் செலுத்தாததால், தனக்குப் பின் தனது மருமகள் சூளிகாம்பாள் மடத்து நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார் சிவப்பிரகாச தேசிகர். சூளிகாம்பாள் தனது கடைசி மகனான தண்டபாணி என்பவரை மடாதிபதியாக நியமித்ததாகக் கூறப்படுகிறது
இந்த தண்டபாணி தேசிகர் தான், நித்யானந்தாவை அடுத்த மடாதிபதியாக நியமித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். மடத்திற்கு 2500 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்ததாகவும் ஆனால் அவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலைமையில் மடத்தை புதுப்பிப்பதற்காக பல்வேறு சைவ மடங்களை நாடியுள்ளார் தண்டபாணி. போதிய உதவி கிடைக்காததால், 2018ம் ஆண்டு அப்போதைய தொண்டை மண்டல ஆதீனகர்த்தர் மூலம் நித்யானந்தாவை நாடியுள்ளார்
நித்யானந்தா கூறியதன் பேரில், தொண்டை மண்டல ஆதீனகர்த்தர் சொர்க்கபுர ஆதீனத்தை நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.அவரது பரிந்துரையின் பேரில், 2019ம் ஆண்டு மடத்தின் புனரமைப்புக்கு என, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நித்யானந்தா. அதற்குப் பதிலாக, அடுத்த மடாதிபதியாக தன்னை நியமிக்க வேண்டும் என நித்யானந்தா கூறியுள்ளார்
அதற்கு ஒப்புக் கொண்ட தண்டபாணி தேசிகரும், தனக்குப் பின் சொர்க்கபுர ஆதீனத்தின் 23 வது மடாதிபதியாக நித்யானந்தாவை நியமிப்பதாக ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்த பத்திரத்தை நித்யானந்தா தனது கைலாசா வலைதளத்தில் சமீபத்தில் பதிவேற்றியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே மதுரை ஆதீனத்தில் இதேபோல் நித்யானந்தா ஒப்பந்தம் போட்டு, பின்னர் அது வழக்காக மாறி உயர்நீதிமன்றம் வரை சென்று அவர் வெளியேற்றப்பட்டார். இப்போது அதேபோல், சொர்க்கபுர ஆதீனத்தையும் ஒப்பந்த பத்திரம் மூலம் நித்யானந்தா விலைக்கு வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சைவ மடங்களில் ஒப்பந்த பத்திரம் எழுதுவது சட்டரீதியாக வழக்கத்தில் இல்லை என்பதையும், உரிய சடங்குகளின் அடிப்படையிலும், குருநாதரின் அருகில் இருந்து பல ஆண்டுகள் பணிவிடை செய்த பிறகுமே ஒருவர் அடுத்த மடாதிபதியாக முடியும் என்பதையும் நித்யானந்தா அறிந்தவர் தான். ஆனாலும், தஞ்சை மற்றும் வேதாரண்யத்தில் சில அத்வைத மடங்களைப் பணம் கொடுத்து தானப் பத்திரம் மூலம் கைப்பற்றியது போல, தொண்டை மண்டல ஆதீனம், மதுரை ஆதீனம் என சைவ மடங்களையும் நித்யானந்தா கைப்பற்ற முயன்று சட்டரீதியாக தோல்வியடைந்துள்ளார்.
இந்த நிலைமையில் தான், சொர்க்கபுர ஆதீனத்தையும் அவர் வளைத்துப் போட்டுள்ளதை அவரே அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது ஆதீனத்திற்கு நித்யானந்தா சொன்னபடி எந்தவித உதவியும் செய்யாவிட்டாலும் எதிர்காலத்தில் அவரது ஆட்களாவது அல்லது அவராவது நேரடியாக வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தண்டபாணி தேசிகர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் தன்னைப் பின்பற்றுவதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளில் தனது சீடர்கள் ஆசிரமம் நிறுவியுள்ளதாகவும் பெருமையுடன் கூறிக் கொள்ளும் நித்யானந்தா, தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள மடங்களைக் கைப்பற்றி என்ன சாதிக்கப் போகிறார்? அவற்றைக் கைப்பற்ற முயல்வதை எப்போது நிறுத்தப் போகிறார் என்பதுதான் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. பதில் சொல்வாரா நித்யானந்தா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.