செங்கல் சூளையில் கூலித் தொழிலாளி மர்ம மரணம்.. 3 பேர் கைது .. தொடரும் உறவினர்களின் போராட்டம்

மாதிரிப்படம்

 • Share this:
  செங்கல் சூளையில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வழக்கில் சூளை உரிமையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சீர்காழி அருகே நெப்பத்தூரில், சுரேஷ் சந்த் மற்றும் அவரது மகன் சித்தார்த் ஆகியோருக்கு சொந்தமாக ஆர்.கே.பி சேம்பர் என்ற செங்கல் சூளை உள்ளது. இந்த சூளையில் உள்ளூர் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். சீர்காழி அருகே கீழசட்டநாதபுரம் ஊராட்சி, நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான சீனிவாசன் அந்த சூளையில் பணிபுரிந்து வந்தார்.

  சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சூளைக்கு சென்ற சீனிவாசன், தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதாக குடும்பத்தினருக்குத் தகவல் வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், சம்பளம் குறைவாக இருப்பதாகக் கூறி கடந்த ஒரு மாதம் முன்பு சீனிவாசன் வேலையை விட்டு விலகியது தெரியவந்தது.

  கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது சேமநல நிதி 10 லட்சம் ரூபாயைத் தரும்படி சூளை உரிமையாளர் சித்தார்த்திடம் சீனிவாசன் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சித்தார்த்துக்கும் சீனிவாசனுக்கும் இடையே அடிதடி மோதல் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

  மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில்தான் சனிக்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சீனிவாசன் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். சீனிவாசன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியும், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தொடர் போராட்டம் காரணமாக, இந்த வழக்கில் சூளை உரிமையாளர்கள் சுரேஷ், சித்தார்த் மற்றும் மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்குத் தூண்டிய பிரிவு மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இதற்கிடையே, திங்களன்று சீனிவாசனின் உடல் கூறாய்வு பணிகள் தொடங்கிய நிலையில் அதை உறவினர்கள் தடுத்து நிறுத்தினர். சீனிவாசன் சாவில் மர்மம் உள்ளதால் உள்ளூர் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்றும் தங்கள் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியும் 2வது நாளாக மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் படிக்க... தமிழகத்தில் இன்று முதல் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு..

  செங்கல் சூளையில் உண்மையில் நடந்தது என்ன? கூலித்தொழிலாளி சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? முழுமையான விசாரணை நடக்குமா?

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: