சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவி (35) என்பவர் நேற்று மாலை ஆதியப்பன் நாயக்கன் தெருவில் உள்ள மைதானத்தில் இறந்து கிடப்பதாக பூக்கடை போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று விசாரணை செய்த போது ரவியின் தலையில் காயம் இருந்தது. இதனையடுத்து சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் அடுத்தடுத்த விசாரணைகளில் மர்ம நபர்கள் சிலர் ரவியை தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணையில் அதே பகுதியில் நேற்று சவ ஊர்வலம் ஒன்றில் ரவி மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பேரில் ரவியை அவரது நண்பர்கள் தாக்கியதாகவும் தெரியவந்தது.
ரவியை தாக்கிய அவரது நண்பர்களான சவுகார்பேட்டையைச் சேர்ந்த காக்கா தீனா (23), திலீப் குமார் (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் என தெரியவந்தது. பின்னர் தலைமறைவாக இருந்த காக்கா தீனா மற்றும் திலிப் குமாரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடனமாடிய இவர்கள் சவ ஊர்வலத்திற்கு பின் ரவியிடம் மது கேட்டுள்ளனர். அதற்கு ரவி மது தர மறுத்துள்ளார். இதனால், ரவிக்கும் அவரது நண்பர்கள் மற்றும் இளஞ்சிறார் ஆகியோருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின் தகராறு எழுந்துள்ளது.
பின்னர், தகராறு முற்றவே காக்கா தீனா, திலீப் குமார் மற்றும் இளஞ்சிறார் ஆகியோர் ஒன்று சேர்ந்து ரவியை பலமாக தாக்கியதும் பின் கத்தியால் ரவியின் தலையில் பலமாக தாக்கியதும் தெரியவந்தது.
தாக்குதலுக்கு பின் பயந்து போன ரவியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர், அதே இடத்தில் மயங்கி விழுந்த ரவி உயிரிழந்தார் எனவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காக்கா தீனா மற்றும் திலீப் குமார் ஆகியோரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள இளைஞரரை போலீசார் தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.