மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை தாமதமானதன் காரணம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கம்.அளிக்க
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் 2004ஆம்.ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்த போது புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் குறித்து 2018ஆம் ஆண்டுதான் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், குடமுழுக்கு நடந்தபோது கோவில் இணை ஆணையராக இருந்த திருமகள், ஸ்தபதி முத்தைய்யா, டிவிஎஸ் நிறுவன உரிமையாளர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 90 சதவீத முடிவடைந்துள்ளதாகவும், 85 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், மாயமான சிலையை கண்டுபிடிக்க முடியாததால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Also Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு... தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?
அப்போது உண்மை கண்டறியும் விசாரணை நடைபெறவில்லை என ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அறநிலையத் துறை தரப்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உண்மை கண்டறியும் விசாரணை தாமதமாக காரணம் என்ன, பொறுப்பாளர்கள் யார் என்பது குறித்தும், அனைத்து ஆவணங்களுடனும் அறநிலையத்துறை ஆணையர் ஜனவரி 31ஆம் தேதி காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டனர்.
மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு குறித்த ஆவணங்கள், விசாரணை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.