தலைகீழாக தொங்கவிட்டு, அடித்து இளைஞர் படுகொலை - கடன் பிரச்னையில் வெறிச்செயல்

இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியதில் உயிரிழப்பு - நடந்தது என்ன?

புதுக்கோட்டை அருகே, கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் 35 வயது நபரைக் கடத்திச் சென்ற கும்பல், அவரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்ததில் உயிரிழந்தார்.

 • Share this:
   புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள செங்கலாக்குடி கிராமத்தின் குளக்கரை அருகே ஒரு பீரோ கம்பெனி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

  அவர்கள் உடனடியாக பீரோ கம்பெனிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒருவரை கயிற்றில் தலைகீழாகக் கட்டி ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

  கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை மீட்க முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம், அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

  தகவலின் பேரில் செங்கலாக்குடி கிராமத்திற்கு சென்ற மாத்தூர் போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த திருச்சி கேகே நகர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன், முகம்மது அபிப், ரங்கா நகரைச் சேர்ந்த சார்லஸ், காக்காத்தோப்பை சேர்ந்த ஷேக், பூந்தோட்ட தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் தென்னூர் பகுதியைச் சேர்ந்த காஜா முகம்மது, பெரியார் நகரைச் சேர்ந்த வின்சென்ட் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

  மேலும் படிக்க...இன்று திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில் நடை: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு..

  உயிரிழந்த நபர், திருச்சி பாலக்கரையை சேர்ந்த 35 வயதான ரகுமான் என்ற அக்பர். புதிய செல்போன்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். திருச்சியைச் சேர்ந்த அபுதாகிர் என்பவரிடம் தொழில் நிமித்தமாக 16 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

  அந்தப் பணத்தை வசூலிக்கவே, அபுதாகிரின் ஆதரவாளர்கள் 11 பேர் ரகுமானை வெள்ளிக்கிழமை கடத்தி பீரோ கம்பெனிக்கு கொண்டு சென்றுள்ளனர்.  11 பேரில் ஒருவருக்கு சொந்தமானது தான் அந்த பீரோ கம்பெனி. அங்கு அவரை கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்க விட்டு கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

  ரகுமானுக்கும் அந்த கும்பலுக்கும் என்ன முன்விரோதம், கடத்திச் சென்று கொலை செய்யும் அளவுக்கு அவர்களிடையே என்ன நடந்தது என்பது முழுமையான விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: