• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொலை வழக்கு பதிவு: பதவியை ராஜினாமா செய்கிறார் திமுக எம்.பி?

கொலை வழக்கு பதிவு: பதவியை ராஜினாமா செய்கிறார் திமுக எம்.பி?

திமுக எம்.பி ரமேஷ்

திமுக எம்.பி ரமேஷ்

கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் ஊழியர் அடித்து, விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவான எம்.பியை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share this:
    பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில், ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனி செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜன் என்பவர், அடிக்கடி முந்திரியை திருடியதாக கூறப்படுகிறது.

    இதையறிந்து கோவிந்தராஜை தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும், கோவிந்தராஜனின் குடும்பத்தாருக்கு கடந்த மாதம் 19ம் தேதி முந்திரி கம்பெனியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ஆனால், தனது தந்தை தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், அவர் அடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாகவும், கோவிந்தராஜனின் மகன் காவல்துறையில் புகார் அளித்தார்.  இதுதொடர்பாக பாமகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். கோவிந்தராஜ் தாக்கப்பட்டதை நேரில் கண்ட, முந்திரி கம்பெனி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, கோவிந்தராஜன் முந்திரி திருடியது தெரிந்ததும், அந்த கம்பெனியின் உரிமையாளரும் திமுக எம்.பியுமான ரமேஷ், அங்கு பணியாற்றும் சிலருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.  பின்பு காடம்புலியூர் காவல் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து சென்ற போது, உடலில் காயங்கள் இருந்ததால் கோவிந்தராஜனை கைது செய்ய போலீசார் மறுத்துள்ளனர்.

    அவரை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்து, கோவிந்தராஜனை மீண்டும் முந்திரி கம்பெனிக்கு அழைத்து சென்று, அவருக்கு விஷம் கொடுத்து பிறகு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது.

    இதையடுத்து, கோவிந்தராஜன் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிள் ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  தொடர்ந்து, திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதன்பேரில், நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத் மற்றும் சுந்தராஜன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள திமுக எம்பி. ரமேஷை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

    இதனிடையே, விசாரணையின் போது மயக்கமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  மற்ற நான்கு பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: