Home /News /tamil-nadu /

ஆளுநர் விவகாரம்: எச்சரித்த முரசொலி... பதிலடி கொடுத்த தமிழிசை.. பின்னணி என்ன?

ஆளுநர் விவகாரம்: எச்சரித்த முரசொலி... பதிலடி கொடுத்த தமிழிசை.. பின்னணி என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

RN Ravi | தெலங்கானாவில் தமிழிசைக்கு ஏற்பட்ட அவலம் தான் தமிழ்நாடு உள்பட பிற மாநில ஆளுநர்களுக்கும் நடக்கும் என தனது கண்டனத்தை முரசொலி தெரிவித்திருக்கிறது

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்ற நாள் முதலே தமிழக அரசுக்கும் , ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . மேடைகளில் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கும் திமுக அவ்வப்போது ஆளுநரின் செயல்பாட்டிற்கு தனது அதிகார பூர்வ நாளிதழான முரசொலி மூலம் கண்டனமும் தெரிவித்து வருகிறது .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநில அரசு ஆளுநருக்கான உரிய மரியாதையை கொடுப்பதில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் . இதுதொடர்பாக நேற்று வெளியான முரசொலியின் கட்டுரையில் ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் , தன்னிலை அறியாது பேசியும், செயல்பட்டுக் கொண்டும் உள்ள ஆளுநர்கள் இதை உணராவிட்டால் தெலங்கானாவில் தமிழிசைக்கு ஏற்பட்ட அவலம் தான் தமிழ்நாடு உள்பட பிற மாநில ஆளுநர்களுக்கும் நடக்கும் என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது .

இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன் ” தெலுங்கானா அரசு தன்னை புறக்கணிப்பதாகவும், நான் அவமதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சிப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. நான் என்றுமே அவமதிக்கப்படவும் இல்லை; அலறவும் இல்லை. எதைப் பார்த்தும் அலறவும் மாட்டேன். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரத் தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான். தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவமதிக்கப்படுவது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? இது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. இதற்காக நான் அழவோ, அவமானப்படவோ இல்லை ” என முரசொலியின் கட்டுரைக்கு பதிலளிந்திருந்தார் .

Read More : இது இந்துக்கள் நாடுதான்... ஆ.ராசா கருத்து ஏற்புடையது அல்ல - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!


முரசொலியில் வெளியான தலையங்கம் குறித்து திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியிடம் கேட்டபோது..

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு மக்களால் எந்தவகையிலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் கடிவாளம் போடக்கூடும் என்பதை அறிந்த அறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என கூறினார் . அந்த கோட்பாட்டில் திமுக இன்றளவும் தெளிவாக உள்ளது . நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் தொடங்கி அனைவருமே மக்களால் நேரடியாகவோ மறைமுகவோ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் ஆளுநர் மட்டுமே எந்த வகையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . குறிப்பாக எஸ் ஆர் பொம்மையின் வழக்கிற்கு பிறகு சட்டப்பிரிவு 356- ஐ பயன்படுத்துவதில் ஆளுநரின் பங்கு அதிகரித்திருக்கிறது என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியிருக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் மரியாதைக்குரிய மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கிட்டதிட்ட 11 மாநில அரசுகள் கலைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் ஆளுநர்கள் ஜனநாயகத்தை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். ஆளுநருக்கான மரியாதை அனைத்தும் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது .

ஆனால் ஆளுநர்கள் தங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை காட்டிலும் அதிகார மிக்கவர் என கருதும்போதும்தான் நாங்கள் ஜனநாயக வழியில் எதிர்ப்பை வெளிபடுத்துகிறோம். ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றாலும் குடியரசுத் தலைவர் கையெழுத்து போடவில்லையென்றாலும் இரண்டாம் முறையாக அனுப்பும்போது அவர்களால் நிராகரிக்க முடியாது ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். அதுதான் அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளது . குடியரசுத் தலைவரா ? பிரதமரா ? என ஒப்பிடும்போதும் எப்படி நாட்டிற்கு பிரதமர் பதவி முக்கியத்துவம் பெறுகிறதோ அதுபோல் தான் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

Read More : ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது: கே.எஸ்.அழகிரி


நாங்கள் இதுவரை 21 மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருக்கிறோம் அதில் வெறும் 6 மசோத்தக்களை தவிர மற்ற மசோதாவுக்கு ஆளுநர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டு இருக்கிறார். ஒன்று, அந்த மசோதாவை அவர் திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது கையெழுத்து இடவேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி வைத்திருப்பது அவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல . ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும்போதெல்லாம் திமுக அதற்கு குரல் கொடுத்திருக்கிறது. அதுபோல் தான் ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படும்போதும் திராவிட முன்னேற்ற கழகம் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் என்றார்

இதுகுறித்து அரசியல் விமர்சகர் பி ஆர் சீனிவாசனிடம் கேட்டபோது..

ஆரம்ப முதலே ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் , அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என விமர்சித்த திமுக இன்று ஆளுநரின் அதிகாரம் குறித்து முரசொலியில் கட்டுரை எழுதியிருப்பது முரணாக உள்ளது. ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என சொல்லும் திமுக ஏன் ஆளுநரை பார்த்து அஞ்சுகிறது என தெரியவில்லை. இவர்கள் சொல்வதுபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கால கட்டாயம் இல்லை . As soon as possible என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. மாநில அரசு அனுப்பும் அனைத்து மசோதாக்களையும் ஆளுநர் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை .

அந்த மசோதா குறித்து பரிசீலனை செய்து கொள்வதற்கு அவர் நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதைதான் நீட் விவகாரத்திலும் செய்திருக்கிறார் . ஆளுநருக்கு அதிகாரம் இருக்ககூடாது என பேசும் திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோது ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை . கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று ஆரம்பத்தில் ஒரு கட்டுரை , ஆட்டி தாடியும் நாட்டுக்கும் கவர்னரும் தேவையில்லை என ஆர் என் ரவி குறித்து மீண்டும் ஒரு கட்டுரை , சமீபத்தில் மகராஷ்ட்ராவில் ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கட்டுரையென மற்ற மாநிலத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் நடக்கும் பிரச்னைகளுக்கு கூட முரசொலி கட்டுரை எழுதி கொண்டிருக்கிறது .

இவர்கள் வேண்டுமானாலும் தமிழிசையை விமர்சித்து கட்டுரை எழுதலாம் ஆனால் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் முரசொலியின் கட்டுரைக்கு தகுந்த பதிலடியை கொடுத்திருக்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள் அப்படி பார்த்தால் ராஜஸ்தானில் , சட்டீஸ்கர் , பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காங்கிரஸும் , ஆம் ஆத்மியும் தான் ஆள்கின்றன . அங்கு ஆளுநரால் எந்த பிரச்னையுமே இல்லை . தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி அபரீதமாக இருக்கிறது . அதை திமுகவால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை .

Read More : இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறில்லை - சீமான் கருத்து


மோடியின் சிறப்பான ஆட்சியால் தமிழக மக்களும் தற்போது பாஜகவை நம்பிவருகின்றன . அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையில்லாமல் ஆளுநரை திமுக விமர்சித்து வருகிறது. இவர்கள் சொல்வது போல் ஆளுநர் வரம்புமீறி செயல்பட்டால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். அதை ஏன் இவர்கள் செய்யவில்லை. தமிழக ஆளுநர் ஆர் என் ரவியாகட்டும் , தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகட்டும் இருவருமே அவரவர்கள் வேலையைதான் செய்துவருகின்றன. மக்களை பெரிதும் பாதிக்கும் மின் கட்டண உயர்வு , சொத்துவரி உயர்வு , சட்ட ஒழுங்கு போன்ற பிரச்னைகளை மறைக்க திமுக ஆளுநரை குற்றம் சாட்டிவருகிறது என்றார் .

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: DMK, Murasoli, RN Ravi, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி