முல்லைப்பெரியாறு விவகாரத்தில் 2014 ஆம் ஆண்டின் இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் மனுக்களாக தற்போதைய மனுக்களை எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் எந்த திட்டமும் தமிழகத்திடம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரச உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுப்பதாகவும், சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் கூறியுள்ளது.ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகவே உள்ளதாகவும், அதற்கு முன்னர் அணையை பலப்படுத்தும் பணிகளான மரம் வெட்டுவது, சாலை போடும் பணிகள், பேபி அணையை பலப்படுத்த தேவையான பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு இடையூறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையை ஆய்வு செய்ய சர்வதேச குழு தேவையில்லை என்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசின் குழுதான் அணையை ஆய்வு செய்யும் எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அணை பாதுகாப்பு, பலப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து மட்டுமே இங்கு வாதிட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,இருமாநில அரசுகளின் அரசியல் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தினர். அத்துடன் 2014 ஆம் ஆண்டின் இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் மனுக்களாக தற்போதைய மனுக்களை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.