முகிலன் மாயமான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

முகிலன் வழக்கில் விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

முகிலன் மாயமான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது - உயர் நீதிமன்ற நீதிபதிகள்
முகிலன் - சமூக ஆர்வலர்
  • News18
  • Last Updated: June 27, 2019, 5:25 PM IST
  • Share this:
மாயமான சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க சிபிசிஐடி காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார்.

அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.


ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக சிபிடிஐடி தரப்பில் சீல் வைக்கப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் சீல் வைக்கப்பட்ட புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே என வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு போட்ட பதிவுக்கு, ராஜபாளையம் காவல் ஆய்வாளர் , 'சமாதி' என பதிலளித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார்.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், சிபிசிஐடி போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால் இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Also see... முகிலன் பற்றிய தகவல் கொடுத்தால் சன்மானம் - சிபிசிஐடி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்