நீட் தேர்விலிருந்து உறுதியாக விலக்கு பெறுவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வில் இருந்து உறுதியாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுகவால் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்ததாக பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விசயத்தை அவையில் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் மறைந்த முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகே நீட் தேர்வு தமிழக்த்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார்.

  தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கருணாநிதி ஆட்சியிலிருந்த வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்பம் காலம் முதலே எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டரீதியாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்திக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை அழுத்தமாக சொல்லியிருப்பதாக கூறிய முதல்வர், ஏ.கே.ராஜன் தலைமையிலான, குழு அளிக்கும் பரிந்துரையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வை பொறுத்த வரை நிச்சயம் தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா எனவும் மாணவர்கள் தற்போது குழப்பமான நிலையில் இருப்பதால் தேர்வு நடைபெறுமா ? நடைபெறாதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர், கடந்த ஆண்டு இதே கேள்வியை நாங்கள் எழுப்பினோம். அதற்கு நீங்கள் சொன்ன பதில் தான் இப்போது நாங்கள் சொல்கிறோம் எனவும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நீங்களும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு கண்டிப்பாக துணை நிற்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியதையடுத்து விவாதம் நிறைவுபெற்றது.
  Published by:Karthick S
  First published: