மிதிவண்டியில் தொழிலை ஆரம்பித்து மிகப்பெரிய ஸ்தாபனத்தை உருவாக்கியவர்... வசந்தகுமாரின் சாதனை பயணம்

சமூக சேவகரான வசந்த குமார் ஏழை மாணவர்களுக்கு இலவச டியுசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார்.

மிதிவண்டியில் தொழிலை ஆரம்பித்து மிகப்பெரிய ஸ்தாபனத்தை உருவாக்கியவர்... வசந்தகுமாரின் சாதனை பயணம்
வசந்த குமார்
  • Share this:
மிதிவண்டியில் சென்று வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்பவராக பணியைத் தொடங்கி பிரமாண்ட நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார். தொழிலில் மட்டுமின்றி அரசியலிலும் கடைசி வரை மின்னிய நட்சத்திரம் அவர்.

தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட தொழிலதிபராகவும், மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல்வாதியாகவும் கோலோச்சியவர் வசந்தகுமார். 1950ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர் வசந்தகுமார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜய் வசந்த், வினோத்குமார் என்ற இரு மகன்களும், தங்கமலர் எனும் ஒரு மகளும் உள்ளனர்.

1970களின் முற்பகுதியில் பொருட்கள் விற்பனையாளராக தன் வாழ்க்கையைத் துவங்கிய வசந்தகுமார், 1978ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரின் மளிகை கடையை வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார். பின்னாளில், அது வசந்த் அண்ட் கோ எனும் மிகப்பெரும் ஸ்தாபனமாக மாறியது.


ஆரம்பத்தில் வீடு வீடாக மிதிவண்டியில் சென்று பொருட்களை விற்ற வசந்தகுமார், தவணை முறையில் பொருட்களுக்கான பணம் வசூலித்தார். இது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தன் கடுமையான உழைப்பாலும், தொழில் திறனாலும் வசந்த் அண்ட் கோவை தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக உயர்த்தினார். இன்று தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் 61 கிளைகளுடன் பிரம்மாண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகிறது வசந்த் அன்ட் கோ.

தமிழக அரசியலிலும் அறியப்பட்ட தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியின் மீதான பிடிப்பால் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வசந்தகுமார், 2006ல் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் மூலம் நாங்குநேரி தொகுதியில் 35 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றது.2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டபோது, கூட்டணியுடன் போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் வசந்தகுமாரை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே கன்னியாகுமரியில் வெற்றி பெற்றார். .

2016ம் ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வென்று சட்டமன்ற உறுப்பினரான வசந்தகுமார், 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகினார்.

மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அப்போது வெற்றி பெற்ற வேட்பாளர்களில் இரண்டாவது பணக்கார வேட்பாளர் வசந்தகுமார்.

வசந்த குமார், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான குமரி அனந்தனின் சகோதரர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா.

வசந்தகுமார் எழுதிய வெற்றிப்படிக்கட்டு என்ற புத்தகத்தை 2006ம் ஆண்டு ரஜினிகாந்த் வெளியிட்டார். 2008ம் ஆண்டு வசந்த் தொலைக்காட்சியை இவர் தொடங்கினார். இவரது மகன் விஜய் வசந்த் சென்னை 600028, நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமூக சேவகரான வசந்த குமார் ஏழை மாணவர்களுக்கு இலவச டியுசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும் தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கினார்.கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் வசந்தகுமார்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading