சோனியா, ராகுலிடம் இந்தியில் பேச ஆசை - இறப்பதற்கு முன் இந்தி கற்றுக்கொண்ட வசந்தகுமார்

வசந்த குமார்

சோனியா, ராகுலிடம் இந்தியில் பேச வேண்டும் என்று வாழ்வின் கடைசி காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆர்வமுடன் இந்தி கற்றுக் கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதே வசந்த குமாருக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தவுடன் இந்தி கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.

இதற்காக சுமார் எட்டு மாதங்கள் இந்தி பேச ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஜவகர்லால் நேரு எனும் இந்தி ஆசிரியரிடம் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்தி பேச பயிற்சி எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜவகர்லால் நேருவிடம் பேசியபோது "வசந்தகுமார் அண்ணாச்சி தனக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆன உடனேயே இந்தி கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இதற்காக காலை 8 மணிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விடுவேன். நான் போகும்போது குளித்துமுடித்து என்னை வரவேற்க வாசலில் தயாராக நிற்பார். உள்ளே சென்ற உடன் வகுப்பு தொடங்கும். எட்டு மணி முதல் ஒன்பது அல்லது ஒன்பது முப்பது மணி வரை அவருக்கு இந்தி பேசக் கற்றுக் கொடுத்தேன்.

ஆனால் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்கவில்லை. பேசினால் போதும் என்ற ஒரு மனநிலையில்தான் அவர் இருந்தார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக சரளமாக இந்தி பேச அவர் கற்றுக் கொண்டார்.

கட்சித் தலைமையிடம் இந்தியில் பேசினால் நன்றாக இருக்கும் என்பதற்காகவே இதில் ஆர்வம் காட்டியதாக அண்ணாச்சி பலமுறை சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் ஆங்கிலத்தில் பேசுவதை விட இந்தியில் பேசினால் நன்றாக இருக்கும் என்பதே அவருடைய எண்ண ஓட்டமாக இருந்தது.Also read... நடிகர் சூர்யா கருத்தை நீதிமன்றம் பெரிதுபடுத்தக்கூடாது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..

அதற்காகவே இத்தனை வயதிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
ஒரு கல்லூரி மாணவனைப் போல நான் சொல்லும் அனைத்திற்கும் மறுப்பு சொல்லாமல், உயர்ந்த இடத்தில் இருக்கிறோம், வசதியாக இருக்கிறோம், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறோம் என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல சிரித்துக்கொண்டே இந்தி கற்றுக் கொண்டார்.

அவருடைய பேத்திக்கும் இந்தி சொல்லிக் கொடுக்க சொல்லி என்னிடம் கூறினார். தற்போதைய சூழலில் அவர் 80% கற்றுத் தேர்ந்து இருந்தார் பேசுவதற்கு மட்டும். இன்னும் சில மாதங்கள் அவருக்கு நான் பயிற்சி கொடுத்திருந்தால் மிகச் சரளமாக 100 சதவீதம் இந்தி பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால் தற்போது அவர் நம்மிடையே இல்லாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இத்தனை வயதிலும் தனக்கு தெரியாத பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், முயற்சியும் மட்டுமே அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததாக உடன் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: