தடுப்பூசிக்கான கோவின் ஆப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு - எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

கோவின் இணையப் பக்கம்

தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் கூடுதலாக இந்திய அளவில் கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இதற்கிடையில், ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆரம்பத்தில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 60- வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கிடையில், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின்(cowin.gov) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மொபைல்போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற ஆப்பாகவும் கிடைக்கிறது. இந்த கோவின் இணையம் மற்றும் ஆப்பில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது, பிற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான COWIN ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: