பிஞ்சு குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் துளசி ஆந்திராவில் கைது

குழந்தையை தாக்கிய தாய் துளசி

முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பிஞ்சு குழந்தையை தாய் தாக்கும் பரபரப்பு வீடியோ ஒரே நாளில் தமிழகத்தை உலுக்கிய நிலையில், குழந்தையின் தாய் துளசியை ஆந்திராவில் கைது செய்தனர் செஞ்சி தனிப்படை காவல்துறையினர்.

  விழுப்புரம் மாவட்டம். செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணலப்பாடி மேட்டுர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருடை மனைவி துளசி. சமீபகாலமாக தனது கணவன் மீதுள்ள வெறுப்பு காரணமாக இவர்களுடைய இரண்டு வயது குழந்தை பிரதீப்பை வீட்டில் தனியாக இருக்கும்போது கடுமையா தாக்கியதோடு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார் தாய் துளசி.

  இந்த கொடூரத்தை அறிந்த கணவர் வடிவழகன் துளசியுடன் சண்டைபோட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனைவி துளசியை, கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திராவில் உள்ள தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார் வடிவழகன். துளசியின் செல்போன் கணவரிடம் இருந்த நிலையில் உறவினர்கள் சிலர் செல்போனை ஆராய்ந்து பார்த்த பொழுது துளசி தனது குழந்தையை கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தும் மனதை பதைபதைக்கும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை அறிந்தனர்.

  பின்னர், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துளவி மீது சத்தியமங்கலம் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி அப்பகுதியில் உள்ள அருணப்பள்ளி என்கிற கிராமத்தில் கோழிபன்னையில் துளசி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் உடனடியாக குழந்தையின் தாய் துளசியை கைது செய்தனர்.

  அதனைத் தொடர்ந்து, இன்று காலை சத்தியமங்கலம் காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட துளசியிடம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரேம்குமார் என்ற நபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக குழந்தையை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

  Must Read : பெற்ற குழந்தையை மிருகத்தனமாக தாக்கி வீடியோ எடுத்த பெண்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

  இதனைத் தொடர்ந்து பிரேம்குமாரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை முடிவடைந்த நிலையில் தாய் துளசி செஞ்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  அதன்படி, செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக துளசி அழைத்துச் செல்லப்பட்டார். மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு துளசி சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்
  Published by:Suresh V
  First published: