ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான பெரும்பாலான தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிப்பு..!

தருமபுரி ஏரியூர் ஒன்றியம் பகுதியில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான பெரும்பாலான தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிப்பு..!
News18
  • News18
  • Last Updated: January 3, 2020, 8:30 AM IST
  • Share this:
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில், பெரும்பாலானவை செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல் என எதுவாக இருந்தாலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அளித்த தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்கள் அளித்த வாக்குகள் பெரும்பாலும் செல்லாத வாக்குகளாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தருமபுரி ஏரியூர் ஒன்றியம் பகுதியில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பென்னாகரம் ஒன்றியத்தில் பதிவான 415 தபால் வாக்குகளில் 150 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்றும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான 60 வாக்குகளில் 58 தபால் வாக்குகள் செல்லாதவை என்றும் தெரிய வந்துள்ளது.

செல்லாத வாக்குகள் பதிவானதில் ஒசூர், ஒட்டன்சத்திரமும், கொடைக்கானல் ஆகியவை புதிய சாதனையையே படைத்துள்ளன. ஒசூரில் 99 தபால் வாக்குகள் பதிவான நிலையில், முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி, அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன.

கொடைக்கானலில் பதிவான 17 தபால் வாக்குகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒட்டன்சத்திரத்தில் பதிவான 74 தபால் வாக்குகளில் 73 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான 354 வாக்குகளில், 293 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன.இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான 67 தபால் வாக்குகளில், 64 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், நீல நிற உறையின் உள்ளே வாக்குச் சீட்டையும், உறையின் மேல் பகுதியில் 16 மற்றும் 17ஆம் படிவத்தை வைக்குமாறும், அவ்வாறு வைக்காவிட்டால் அவை செல்லாதவையாக அறிவிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், பெரும்பாலானோர் மூன்று படிவங்களையும் ஒன்றாக சேர்த்து நீல நிற உறையில் வைத்த காரணத்தினாலேயே, நிறைய வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு குறித்து போதிய பயிற்சி அளிக்கப்படாததே, இத்தகைய குழப்பத்திற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading