ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைக்கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட பழங்குடியின பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லாமல் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை என்னும் மலைவாழ் கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடங்கப்பள்ளி மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறவிட உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆதிதிராவிடர் பழங்குடியின தொடக்கப் பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆசிரியை மட்டுமே பணிபுரிந்து வந்துள்ளார். அவரும் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளதால் மாணவர்கள் படிக்க முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, உயர்நிலைப் பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் இல்லாததால் 10ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த இளைஞர்களே மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட் வகுப்பறைக்காக வாங்கப்பட்டுள்ள சேர் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இந்த நிலையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போதிய மாணவர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.