சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள விவசாயிகளின் தென்னந்தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் புதுவித வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் அனைத்து தென்னைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு வேளாண்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, மதகுபட்டி அருகேவுள்ள பாகனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் அளவில் விளை நிலங்களில் 2,000 தென்னை மரங்களை நடவு செய்துள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து இந்த தென்னை சாகுபடியை அவர்கள் மேற்கொண்ட நிலையில், அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த மரங்களில் புது விதமான வெள்ளை நிற ஈ போன்ற பூச்சி பரவி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மரத்தின் கிளைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் கருகிய நிலையில் உதிர்ந்து காய் காய்ப்பதும் தடைபட்டு முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
மேலும் முதல் தோப்பில் உள்ள ஒரு மரம் பாதிப்புக்கு உள்ளாகி அது அப்படியே சுற்றெங்கிலும் பரவி அனைத்து மரங்களையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக தோப்பு முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
நொறுங்கும் மணப்பாறை முறுக்கு தொழில் - காப்பாற்றுமா தமிழக அரசு?
வருமானம் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை, ஆனால் 25 ஆண்டுகள் பிள்ளைகளை போல் வளர்த்த மரமே முற்றிலும் பாதிக்கப்படுவது வேதனையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். மேலும் இது குறித்து வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறையான நடவடிக்கை இல்லை என்றும் தமிழ்நாடு அரசு இதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.