• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'டெல்டாவில் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு'; டூவீலர் பயணத்தை தவிர்க்க அமைச்சர் கோரிக்கை

'டெல்டாவில் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு'; டூவீலர் பயணத்தை தவிர்க்க அமைச்சர் கோரிக்கை

தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் அதிகப்படியான மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் மழை தொடர்ச்சியாக பெய்தாலும், மழை நீரை வெளியேற்ற கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • Share this:
    டெல்டா மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எ.ஸ்.எ.ஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். வட தமிழக பகுதியில் மழையுடன் காற்றும் வேகமாக வீசி வருவதால் இருசக்கர வாகன பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக் கடக்கவுள்ளது. இதுகுறித்தும், தமிழகத்தில் நடைபெற்று வரும் மழை பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் உருவான மழையால் 38 மாவட்டங்களில் சராசரியாக 21.02 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 130 .6 4 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. இன்றைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும். இன்றைக்கு காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மழையுடன் சேர்ந்து காற்றும் வேகமாக வீசுவதால் இருசக்கர வாகன பயணத்தை பொதுமக்கள் அறவே தவிர்க்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓர் உத்தேச கணக்கை எடுத்துள்ளோம். மழை நின்றவுடன் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். எங்கே தேவை ஏற்படுகிறதோ அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

    தற்போது 13 சுரங்கப்பாதைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத சூழலை உருவாக்கிக் கொண்டு வருகிறோம். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் அதிகப்படியான மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் மழை தொடர்ச்சியாக பெய்தாலும், மழை நீரை வெளியேற்ற கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செங்குன்றத்திலிருந்து 3,000 கனஅடி, செம்பரம்பாக்கத்திலிருந்து 2,150 கன அடி, பூண்டியிலிருந்து 6,000 கன அடி, சோழவரத்திலிருந்து 2015 கன அடி தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டிருக்கிறோம். மழையின் அளவைப் பொருத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்.
    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: