நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவை அடுத்து சிக்கிய 4 மாணவர்கள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யாவை அடுத்து சிக்கிய 4 மாணவர்கள்

நீட் தேர்வு (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 6 மாணவர்கள் நீட் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக சிபிசிஐடி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது உதித் சூர்யா தவிர, மேலும் 4 மாணவர்கள் போலீசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யமுடியுமா? என்பதை பலரும் யோசிக்க தயங்கும் நிலையில், அப்படியொரு முறைக்கேட்டை அரங்கேற்றிய மாணவன் உதித் சூர்யாவும், அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்துடன் நீட் ஆள்மாறாட்ட முறைகேடு முடிந்துவிடவில்லை என்பதுதான் அடுத்த அதிர்ச்சி. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் மேலும் சிக்கியுள்ள 4 மாணவர்கள் யார்? யார்?

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகியுள்ள மருத்துவர் வெங்கடேசனின் வாக்குமூலம் மற்றும் செல்போன் அழைப்புகளைக்கொண்டு மேலும் 4 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாய் சக்தி மருத்துவக்கல்லூரி, பாலாஜி மருத்துவக்கல்லூரி, காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்துவரும் மாணவர்களில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அபிராமி, ராகுல், பிரவீன் ஆகியோரின் முகவரியை கண்டறிந்த சிபிசிஐடி போலீசார் ரகசிய திட்டமொன்றை தீட்டினர்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அதிரடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மாணவர்களை குடும்பத்துடன் சுற்றி வளைத்தனர்.  அதேபோல், தர்மபுரியைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் குடும்பத்தாரையும் போலீசார் சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து, ஆள் மாறாட்ட மோசடி குறித்த விசாரணைக்காக, 4 மாணவர்களின் குடும்பத்தாரையும் தேனிக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.

இன்று தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த 4 மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு இடைத்தரகர்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டுவரும் பிரபல நீட் பயிற்சி மையத்திற்கு வெளியே ரசீத் என்ற தரகர் மாணவர்களை சந்தித்துள்ளார்.

அதேபோல், பிற இடங்களில் இர்பான் என்ற இடைத் தரகரும் மாணவர்களையும் குடும்பத்தாரையும் சந்தித்துவந்துள்ளார் என்கிறது சிபிசிஐடி.

தமிழகத்தில் குறைந்தபட்சம் 6 மாணவர்களாவது ஆள் மாறாட்ட மோசடி மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது என்கிறார் மூத்த சிபிசிஐடி அதிகாரி ஒருவர்.

இந்த முறைகேட்டில் முக்கிய அரசியல் புள்ளிக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், லட்சக் கணக்கில் பணம் கட்டிய மாணவர்களும், பெற்றோர்களும் அடுத்தடுத்து சிக்கிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Sankar
First published: