’கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் பில்லிசூனியம் வைத்துவிடுவேன் என மிரட்டுகிறார்’ - சாமியார் மீது அடுக்கடுக்கான பணமோசடி புகார்

’கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் பில்லிசூனியம் வைத்துவிடுனேன் என மிரட்டுகிறார்’ - சாமியார் மீது அடுக்கடுக்கான பணமோசடி புகார்

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாமியார் ஒருவர் மீது அடுக்கடுக்கான பணமோசடி புகார் எழுந்துள்ளது.

 • Share this:
  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கானார் நீலகண்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (59). இவர் ஆற்காடு பஜார் பகுதியில் பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறார். இவருக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ள நிலையில், கடந்த 2017ம் ஆண்டு வேலூர் மாவட்டம்  திருவலம் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வமங்கள பீடத்தின் அதிபர் சாந்தா சாமியாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் அளவிற்கு நெருக்கமாக மாறி உள்ளனர்.

  இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த முக்கிய நபருடன் இணைந்து, தான் தொழில்செய்து வருவதாக சாந்தா சாமியார் சங்கரிடம் கூறியுள்ளார். மேலும், அதன் மூலம் மாதம் பல லட்ச ரூபாய் தனக்கு வருமானம் கிடைப்பதாகக் கூறிய அவர், அதில் முதலீடு செய்தால் உங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்துள்ளார். சாந்தா சாமியார் கூறிய வார்த்தைகளை நம்பிய சங்கர் தன்னிடமிருந்த 10 லட்ச ரூபாயைக் கொண்டுசென்று சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

  Also read: யோகா கற்கச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 64 வயது யோகா மாஸ்டர் போக்சோவில் கைது..

  பணம் கொடுத்த ஓரிரு மாதத்தில் பெங்களூரில்  உள்ளவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தங்களது பணத்தை ஓரிரு மாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார் சாந்தா சாமியார். பணம் கொடுத்து 2 ஆண்டுகாலம் ஆன நிலையில், தற்போது பணத்தைத் திருப்பிக் கேட்டால் அதைத் தர மறுப்பதோடு, சூனியம் வைத்து விடுவேன் என்றும் உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என்றும் மிரட்டியதாக சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.  இதனால் தன் உயிருக்கு சாந்தா சாமியார் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எப்படியாவது தன்னுடைய 10 லட்ச ரூபாய் பணத்தை அவரிடமிருந்து திரும்பப் பெற்றுத்தரக் கோரியும் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களிடம் சங்கர் புகார் மனு அளித்துள்ளார்.

  இதேபோல் கடந்த மாதம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பென்ஸ் பாண்டியன் மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோரிடம் 10 லட்ச ரூபாயும் வாலாஜா பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவரிடம் 45 லட்சம் ரூபாயும் மோசடி ஈடுபட்டுள்ளதாகவும் சாந்தா சாமியார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகத்தை மூலதனமாக கொண்டு பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அவரிடம் பணத்தை இழந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
  Published by:Rizwan
  First published: