Home /News /tamil-nadu /

ஆவின் கூட்டுறவு சங்கத்தில் சுமார் ₹ 8 கோடி கையாடல் அம்பலம் - தொகையை வசூலிக்க உத்தரவு

ஆவின் கூட்டுறவு சங்கத்தில் சுமார் ₹ 8 கோடி கையாடல் அம்பலம் - தொகையை வசூலிக்க உத்தரவு

ஆவின் ஊழியர்களுக்கான கூட்டுறவு வங்கி

ஆவின் ஊழியர்களுக்கான கூட்டுறவு வங்கி

மதுரையில் ஆவின் ஊழியர்களுக்கான கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் நடந்ததும், அதை கூட்டுறவுத்துறை உறுதி செய்து சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கு, குறைந்த வட்டியில் நீண்ட கால குறுகிய கால கடன்கள் வழங்கவும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிக்கனமாக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் உருவாக்கப்பட்டது.

இச்சங்கங்கள் அந்தந்த பகுதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று, நிர்வாகச் செலவுகளுக்கு இரண்டு சதவிகித கூடுதல் வட்டி நிர்ணயித்து, சங்க உறுப்பினர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன் வழங்கிடும்.

அவ்வாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை விட குறைவான வட்டியில், பி கிளாஸ் அங்கத்தினர்கள் மூலம் நீண்ட கால வைப்புத் தொகை பெற்று சங்கத்தின் லாபத்தை இரட்டிப்பாக்கி கொள்ளும். இந்த முறையில்  மதுரை மாவட்ட சங்கங்கள் பெருமளவு நிரந்தர வைப்புத் தொகைகளை பெற்று  நல்ல இலாப நோக்கத்தில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் இருந்த 7 கோடியே 92, 41, 616 ரூபாயை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கையாடல் செய்தது 2017–2018ஆம் நிதியாண்டிற்கான கணக்குகள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி கையாடல் செய்யப்பட்ட தொகையை சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆவின் நிர்வாகமும், கூட்டுறவுத்துறையும் வேடிக்கை பார்ப்பதாக ஆவினில் பணியாற்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்காக சென்ற நிலயைில், அதனை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா கடும் அதிருப்தி தெரிவித்ததால் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் சார்பில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கியையும் எதிர்மனுதாரராக சேர்த்து சூ-மோட்டோ அடிப்படையில் இணைத்த நீதிபதி வழக்கை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். கொரோனா காரணமாக வழக்கு விசாரணை தாமதமான நிலையில், இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றதால் கையாடலில் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து அதற்கான தொகையை பெறுவதற்கான உத்தரவை கூட்றவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சுரேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

நடந்த முறைகேடுகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட தொகையை மட்டும் வசூலிப்பதோடு நிற்காமல், காரணமானவர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் முன்வர வேண்டும். அது மட்டுமின்றி  இதற்கு முன்பாக நடந்த தணிக்கைகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது

 


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Aavin, Cooperative bank, Madurai

அடுத்த செய்தி