• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை - பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை - பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னையில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்ற சோதனையின் முடிவில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.

 • Share this:
  முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 24 இடங்களில், சுமார் 14 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

  கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக எம்.ஆர் விஜயபாஸ்கர் பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளை செய்து கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  இந்நிலையில், கரூரில் உள்ள எம். ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, சாயப்பட்டறை, அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம், அவரது சகோதர் சேகர் நடத்தும் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக், உப்பிடமங்கலத்தை சேர்ந்த ரமேஷ், விஜயபாஸ்கரின் நெருங்கிய ஆதரவாளர்களான ஏகாம்பரம், பரமசிவம், தாம்பரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரின் வீடுகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. கரூரில் விஜயபாஸ்கரின் பினாமியாக கருதப்படும் வேலுச்சாமி என்பவரது வீட்டிலும் சோதனை நீடித்தது.

  எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என மொத்தம் 22 இடங்களில் தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் 13 பேர் வீதம் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையை அறிந்து சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு நிலவியது.

  எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிப்பதற்காக கரூர் ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள இல்லத்திற்கு வந்த கிராம நிர்வாக அதிகாரியை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர். என்ன ஆவணங்களை எடுத்து செல்கிறீர்கள் என்றும் நீங்களாகவே ஏதாவதை கொண்டு வந்து வைத்துவிட்டு பொய் வழக்கு போடலாம் என்றும் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வசம் இருந்த ஆவணங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஏஓவை பத்திரமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

  மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியில் சென்றுவிட்டு காரில் மீண்டும் திரும்பும் போது அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அதிகாரிகளின் காரில் இருந்த ஆவணங்களை அதிமுகவினர் பார்வையிட்டனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து கணினியில் பதிவேற்றினர்.

  சென்னையில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்ற சோதனையின் முடிவில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

  எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்

  இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசு பொறுப்பேற்று இன்னும் 90 நாட்கள் கூட முடியாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதாக விமர்சித்தார். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

  Must Read : ரெய்டுனா அவர்களே பணத்தை வைத்து எடுப்பார்கள்; இதெல்லாம் சகஜம்: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வி.பி துரைசாமி ஆதரவு

  அதைத்தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதனை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டிருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும், மு.க.ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும் தொண்டர்கள் துணையோடு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: