திருவாரூர் தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர். திருவாரூரில் தியாகராஜர் தேரோடும் வீதியை கருணாநிதியின் பெயரை சூட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது. திருமாவளவன் கொழும்புவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை இந்தியாவிலும் வரும் என தெரிவிக்கிறார். இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வரும். ஏனெனில் கொழும்புவில் முழுக்க முழுக்க குடும்ப அரசியல் நடைபெற்று வந்தது. ராஜபக்சேவின் குடும்பத்தில் ஒருவர் அதிபர், மற்றொருவர் பிரதமர், மற்றொருவர் முதல்வர், அவரது மகன்கள் அமைச்சர்களாகவும் எம்பி-க்களாகவும் பதவி வகித்தனர். குடும்ப ஆட்சியின் காரணமாக அனைத்து அரசு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு ஒரே குடும்பத்துக்கு சென்றது.
இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. திருமாவளவன் தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கிற அறிவாலயம் குடும்பம் குறித்த குடும்ப வரைபடத்தை வரைந்து பார்த்தால் யார் யார் எந்தெந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். இருப்பினும் பிரதமர் மோடி வரும் 2024 தேர்தலில் இதுபோன்ற நிலைக்கு எல்லாம் நாடு சென்று விடாமல், அறிவாலயம் குடும்பம், சரத்பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து உலகம் போற்றும் தலைவராக உருவெடுப்பார் என்றார்.
செய்தியாளர்: செந்தில்குமரன் (திருவாரூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.