பாரதியாரிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

பாரதியாரிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இளைஞர்கள் பாரதியாரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாரதியாரின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் இன்று பன்னாட்டு பாரதி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி வணக்கம் என்று தமிழில் கூறி பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ‘நான், பாரதியாருக்கு அவருடைய பிறந்தநாளில் அஞ்சலி செலுத்திவிட்டு என்னுடைய உரையைத் தொடங்குகிறேன். இந்தச் சிறந்தநாளில் சர்வதேச பாரதியார் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். ஸ்ரீசீனிவிஸ்வநாதன், அவருடைய மொத்த வாழ்க்கையும் பாரதி குறித்து ஆய்வு செய்வதற்காக கழித்துள்ளார். அவருடைய அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன். பாரதியாரை எப்படி வரையறுப்பது என்பது மிகவும் கடினமான கேள்வி. பாரதியார் ஒரு துறையில் மட்டும் செயல்படவில்லை. அவர் பன்முகத் தன்மையைக் கொண்டவர். அவர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், செய்தி ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமைவாதி, இன்னும் பல தன்மைகளைக் கொண்டவர்.

  அவருடைய கவிதைகள், சிந்தனை, அவருடைய வாழ்க்கை எல்லாம் மிகச் சிறந்தவை. சமீபத்தில் பாரதியாரின் வாழ்க்கை குறித்து வெளியிடப்பட்ட 16 பகுதிகளைக் கொண்ட பதிப்பைப் பார்த்தேன். 39 வருட வாழ்க்கை அதில் இருந்தது. அவர், ஏராளமானவற்றை செய்துள்ளார். அவருடைய எழுத்து, பிரகாசமான வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்தும் வெளிச்சம் ஆகும். தற்போதைய இளைஞர்கள், பாரதியாரிடம் ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். அதில், முக்கியமானது தைரியம். பயம் என்றால் சுப்ரமணிய பாரதிக்கு என்னவென்று தெரியாது. அவர், அச்சமில்லை, அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே... இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...’ இந்த எழுச்சியை தற்போதைய இளம் தலைமுறையிடையே பார்க்கிறேன். இத்தகைய உத்வேகம் நம்முடைய நாட்டுக்கு அதிசயங்களைக் கொண்டுவரும். பழமைக்கும், புதுமைக்குமான ஆரோக்கியமான கலவையை பாரதியார் விரும்பினார். அவர், நம்முடைய வேரையும் உற்று நோக்கினார். நம் எதிர்காலத்தின் உச்சத்தையும் அவதானித்தார்.

  அவர், தாய் மொழி தமிழையும், தாய் நாட்டையும் அவருடைய இரண்டு கண்களாக கருதினார். அவர், நம்முடை கடந்த கால வியந்தோதினார். ஆனால், அதே நேரத்தில் நாம் கடந்தகால பெருமைகளில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடாது என்று எச்சரிக்கைவிடுத்தார். நாம், அறிவியலை வளர்த்தெடுக்கவேண்டும் என்றார். பாரதியாரின் வளர்ச்சி என்ற வரையறை என்பது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. பெண்களை முன்னேற்றுவதும், அவர்களை சுயமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது மிகமுக்கியமான குறிக்கோளாகும்.

  பெண்கள் தலைநிமிர்ந்து கண்களைப் பார்த்து நடக்கவேண்டும் என்று எழுதினார். முத்ரா யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் இன்று 15 கோடி பெண்கள் தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர். எந்தவொரு சமூகமும் பிளவுபட்டிருந்தால் முன்னேறமுடியாது என்பதை மகாகவி பாரதியார் புரிந்துவைத்திருந்தார். நம் இளைஞர்கள் பாரதியாரிடமிருந்து ஏராளமானவைற்றைக் கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: