நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது.
இதில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 8 பேர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து பாஜகவைச் சேர்ந்த 41 பேர் கிராம ஊராட்சித் தலைவர்களாகவும் வெற்றி பெற்றிருக்கின்றனர். மொத்தத்தில் பாஜகவைச் சேர்ந்த 381 பேர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலனவர்கள் முதல் முறை வெற்றியாளர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Also read:
மகாராஷ்டிரா காங்கிரஸில் டென்ஷன்.. உட்கட்சி பூசலால் மூத்த தலைவர் ராஜினாமா..
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 381 பேரும் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சித் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக ஊராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.
அண்ணாமலையில் பதிவுக்கு கீழே பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதன்படி, “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்.” இவ்வாறு பிரதமர் தனது வாழ்த்தில் தெரிவித்திருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.