அம்பேத்கருடன் பிரதமர்
மோடியை ஒப்பிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா மீது பலர் விமர்சனம் வைத்துவரும் நிலையில், கருத்து சுதந்திரம் என்பது சில கருத்துக்கள் அல்லது சிலருக்கு மட்டும்தானா என தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.
இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்லர். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேச்சு: இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவு
திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இளையராஜாவின் இந்த கருத்தை விமர்சனம் செய்தனர். இதேபோல், சமூக ஊடகங்களிலும் பலர் இளையராஜாவை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இளையராஜா செய்த தவறு என்ன என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது, அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இளையராஜாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே ” என்று பதிவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.