சித்தாந்தம், கொள்கை, செயல்பாடு எனக்கு ஏற்றவை - தி.மு.கவில் இணைந்தார் மகேந்திரன்

மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

 • Share this:
  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்தது முதல் அவருடன் நெருக்கமாக இருந்தவர் மகேந்திரன். கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு கமல்ஹாசன் துணைத்தலைவர் பதவியை வழங்கினார்.

  கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் மகேந்திரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவையின் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார்.

  சிங்கநல்லூர் தொகுதியில் மகேந்திரன் தோல்வியடைந்தாலும் 3-ம் இடம்பிடித்தார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.

  மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரனும் அறிவித்தார். மேலும் கட்சி மீதும் கமல்ஹாசனம் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அவரை துரோகி என விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது. இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் அவரது ஆதரவாளர்கள் 78 பேருடன் சேர்ந்து தி.மு.கவில் இணைந்தார்.

  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேடையில் பேசிய மகேந்திரன், ‘மு.க.ஸ்டாலின் படிப்படியாக முன்னேறியவர். பத்தாண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லாதபோதும், அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. இன்னும் இருபது வருடங்களுக்கு தி.மு.கவை அசைக்க முடியாது" என மக்கள் கூறும் அளவிற்கு இரண்டு மாதங்களில் மு.க.ஸ்டாலின் உழைத்துள்ளார். சித்தாந்தம், கொள்கை, செயல்பாடு என அனைத்தும் எனக்கு ஏற்றவை. எனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் தி.மு.கவில் இணைந்து இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலப் பகுதியில் தி.மு.கவால் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற முடியவில்லை. எனவே, கொங்குமண்டலத்தில் தி.மு.கவை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சி ஈடுபட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக மகேந்திரன் இணைவு பார்க்கப்படுகிறது.
  Published by:Karthick S
  First published: