சட்டப்பேரவைக்குள் விதியை மீறி செல்போன் உபயோகம்; 2012க்கு பின் மீண்டும் சர்ச்சை கிளப்பிய திமுக எம்எல்ஏ!

பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தும் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா

ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு ஜெயக்குமார் சபாநாயகராக இருந்த போது இதேபோல், பேரவைக்குள் செல்போனை பயன்படுத்திய டி.ஆர்.பி.ராஜாவால் சர்ச்சை ஏற்பட்டது.

 • Share this:
  சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே, திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, விதியை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு சென்று பயன்படுத்தியதாக புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  தமிழக சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல் நாளில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.

  இவர்களில் 2 அமைச்சர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள், அவர்களை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், அகர வரிசைப்படி பதவியேற்று கொண்டார்கள்.

  இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டிருந்த போது, இருக்கையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பி.ராஜா செல்போனில் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  டி.ஆர்.பி.ராஜா, திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு ஜெயக்குமார் சபாநாயகராக இருந்த போது இதேபோல், பேரவைக்குள் செல்போனை பயன்படுத்திய டி.ஆர்.பி.ராஜாவால் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, பேரவைக்குள் செய்போன் பயன்படுத்தியதற்காக டி.ஆர்.பி.ராஜா 10 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  இதையடுத்து, சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் தடைவிதித்தார். சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த அவர், எதற்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதன்மூலம், நாட்டிலே சட்டமன்றத்தில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.

  இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. டி ஆர்.பி.ராஜா தற்போது மீண்டும் விதியை மீறி சட்டப்பேரவைக்குள் செல்போனை கொண்டு சென்று,  பயன்படுத்திய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Esakki Raja
  First published: