சசிகலாவை தி.நகர் வீட்டில் சந்தித்த முதல் எம்.எல்.ஏ!

சசிகலாவை தி.நகர் வீட்டில் சந்தித்த முதல் எம்.எல்.ஏ!

சசிகலா

சசிகலாவை முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தித்துள்ளார்.

  • Share this:
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, கொரோனா சிகிச்சைக்குப் பின் பிப்ரவரி 9-ம் தேதி சென்னை திரும்பினார். ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் சசிகலாவின் விடுதலை தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியது.

நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளில் பொதுவெளியில் தலைகாட்டிய சசிகலா, “விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க வருவேன். திமுக தான் நமக்கு எதிரி. அவர்களை வீழ்த்த சபதம் ஏற்போம். கழக உடன்பிறப்புகள் இத்தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் சந்தித்தனர். சந்தித்து விட்டு வெளியே வந்த அனைவரும் நலம் விசாரித்து திரும்பியதாக ஊடகங்களில் சொன்னாலும் அரசியல் பேச்சு நிச்சயம் நடந்திருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.சசிகலா விடுதலைக்குப் பின்னர் இதுவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் நேரடியாக சென்று சந்திக்காத நிலையில் முதல்நபராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரைத்தொடர்ந்து நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சசிகலாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், “அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு, தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலை நிமிர்ந்திடச் செய்வோம். தமிழர் வாழ்வு மலர்ந்திட தியாகத்தலைவி சசிகலா அவர்களின் நல்வாழ்த்துகளோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரைப்போம்” என்ற தீர்மானம் டிடிவி, சசிகலா உள்ளிட்டோரின் அடுத்தகட்ட நகர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: