காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் - எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  காவலர் தாக்கி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பாப்பநாய்க்கன்பட்டி சோதனை சாவடியில் நேற்று மாலை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதில் இடையப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் முருகேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

  இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று, ஜெயராஜ், பென்னிக்ஸ் மறைந்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்தநிலையில் சேலத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தநிலையில், சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி தன் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று மாலை முருகேசன் இருசக்கர வாகனத்தில் வந்த போது அங்கிருந்த காவலர்கள் தணிக்கை செய்ததாகவும், அப்போது அவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். அதனால் காவலர் முருகேசனை தாக்கியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்று காலை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது, முருகேசன் இறந்துவிட்டார். இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதிலளித்தார்.
  Published by:Karthick S
  First published: