Home /News /tamil-nadu /

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும்வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களின் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா என்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் உங்களின் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். அந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘மாநில உரிமை பரிக்கப்படுவதை தடுக்க அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்திய அளவிலான் கட்சிகள் ஆதரவு தர வேண்டும். தி.மு.க பொதுக்குழுவில் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே கூறினேன் கருணாநிதி போல் என்னால் பேசவோ, எழுதவோ தெரியாது. ஆனால் முயற்சி செய்வேன் என தெரிவித்தேன்.

    அந்த முயற்சி தான் இந்த புத்தகம். என்றும் உங்களில் ஒருவன் தான் நான். இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்புக்கு வந்தபோதும் உங்களில் ஒருவனாகத்தான் நான் செயல்பட்டேன். பொருளாளராக ஆனபோதும் அப்படித்தான் செயல்பட்டேன். அமைச்சர் ஆனபோதும்
    துணை முதலமைச்சர் ஆனபோதும் அப்படித்தான் செயல்பட்டேன்.

    கழகத்தின் தலைவராக ஆனபோதும் இப்போது முதலமைச்சராக ஆனபிறகும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன். எனது வாழ்நாள் முழுக்க உங்களில் ஒருவனாகத்தான் நான் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன். இதை விட பெரிய பொறுப்புகளில் என்னை நீங்கள் வைத்தாலும் நான் உங்களில் ஒருவன் தான் நான்.

    கடந்த காலங்களில் நான் வகித்த பல்வேறு பொறுப்புகளிலும் நான் உங்களில் ஒருவனாகவே இருந்தேன். அண்ணா கூறிய சொல் எப்போதும் என் மனதில் இருக்கும். அந்த சொல்தான் - மக்களிடம் செல் என்ற தாரக மந்திரம். சென்னை மாநகர மேயராக பதவி ஏற்றபோது அந்த பதவி என்கிற எழுத்தை திருத்தி பொறுப்பு என கருணாநிதி மாற்றினார். இது எனக்கு மிகப்பெரிய ஒரு பாடத்தை தந்ததாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘உங்களில் ஒருவனான எனது அனுபவங்களில் சிலவற்றை இந்தச் சமுதாயத்துக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கடமையின் காரணமாக அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக நான் எழுதிய பதிவுகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதனை வாசிப்பதன் மூலமாக உங்களில் ஒருவனாக நான் எப்படி முளைத்தேன் என்பதை முதன்முதலாக நீங்கல் அறியப் போகிறீர்கள். எனது இருபத்து மூன்று வயது வரையிலான வாழ்க்கைதான் இந்தப் புத்தகம்.

    கோபாலபுரம் வீடு தமிழ்நாட்டின் நிரந்தரமான அரச சபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. திரையுலகக் கலைஞர்களுக்கு கலைச்சபை. இலக்கியவாதிகளுக்கு சிந்தனைச் சபை. மொத்தத்தில் எங்கள் உயிர்ச்சபை. அந்த உயிர்சபை தான் என்னை உருவாக்கியது. அந்த வீடு என்னை வளர்த்தது – ஆளாக்கியது - பக்குவப்படுத்தியது - பண்படுத்தியது. பல்வேறு பொறுப்புகளுக்கு என்னைத் தகுதிப்படுத்தியது.

    அந்த வகையில் பார்த்தால், இந்தப் புத்தகம் அந்த வீட்டின் வரலாறு! பள்ளிப் பருவத்தில் கழகப்பாடம் படித்த வரலாறு! பாடப்புத்தகங்களோடு சேர்த்து முரசொலி படித்த வரலாறு! கல்லூரிக் காலத்தில் அரிதாரம் பூசி முரசே முழங்கு நாடகம் போட்ட வரலாறு! படித்து முடித்து பணிக்குச் செல்ல விரும்பாமல் மொழிக்கு உயிரைத் தரத் தயார் என முழங்கிய வரலாறு! திரையுலகில் கால் பதித்த வரலாறு! 23 வயதில் துர்க்காவை கரம்பிடித்த வரலாறு! திருமணமான ஐந்து மாத காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட வரலாறு! இப்படி எல்லாத் திருப்பங்களும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான். அதைத்தான் எழுதி இருக்கிறேன்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘நான் தனி மனிதன் அல்ல. ஓரு கூட்டம். அந்த வகையில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்களின் எண்ணமே சித்தாந்தமே எனது கொள்கையாக இருந்துவருகிறது. அந்தக் கொள்கையே திராவிட மாடல். இந்த மாற்றத்தை மேடையில் இருக்கக்கூடிய தலைவர்கள் அகில இந்திய அளவிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார். திராவிட மாடல் மாற்றத்தை இந்திய அளவில் அனைத்து தலைவர்களும் எடுந்த்துச் செல்ல வேண்டும்.

    கூட்டாட்சித் தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்திஅதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதனை மேடையில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் அனைத்தும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது: தமிழன் என்று சொல்ல உரிமையுள்ளது - ராகுல் காந்தி

    நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு - சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு - செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு - இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
    மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக - அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன.

    திராவிட மாடல் ஆட்சிதான் சமூகநீதி ஆட்சி. தி.மு.க அமைத்துள்ள இந்த சமூக நீதி கூட்டமைப்பில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் இணைந்து திராவிட மாடல் ஆட்சி என்ற இந்த சமூக நீதி ஆட்சியை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin, Rahul gandhi

    அடுத்த செய்தி