இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி

இந்திய அளவில் ஒரு மதசார்பற்ற கூட்டணி அமைக்கும் பொறுப்பை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ, கீ.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தின் மீது ரசாயணத் தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நிகழ்த்துக்கொண்டிருக்கிறது. ரசாயணத் தாக்குதலையும், கலாச்சாரத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தி.மு.கவிடம் உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.கவால் வேறூன்ற முடியவில்லை. அதனால், அ.தி.மு.கவை மிரட்டி அவர்கள் மீது சவாரிசெய்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த எல்லா விஷயமும் பா.ஜ.கவின் சதிவிலை என்பது பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி இங்குவருவதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. டி.ஜி.பி வீடு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. மத்திய அரசிடம் இணக்கமாக உறவு வைத்திருப்பதால் தேவையான நிதியைப் பெற முடிகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்.

வர்தா புயல் தாக்கத்தின் போது 22,523 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது. ஆனால், 266 கோடி ரூபாய் தான் வந்தது. ஓகி புயலின் போது மத்திய அரசிடம் 9,302 கோடி ரூபாய் கேட்டது. வந்தது 133 கோடி ரூபாய்தான். கஜா புயல் தாக்கத்தின்போது, 17,899 கோடி ரூபாய். ஆனால் வழங்கப்பட்டது 1,145 கோடி ரூபாய் தான். நிவர் புயல், புரெவி புயலுக்கெல்லாம் நிவாரணம் கிடைத்தது. ஜி.எஸ்.டி வரிப்பணம் கிடைத்ததா? கொரோனா பாதிப்புக்கான நிதி வந்ததா? பிறகு எதற்கு மத்திய அரசுடன் கூட்டணி.

ராகுல் காந்தியிடம் உரிமையான வேண்டுகோள்.. ராகுல் காந்தியிடம் போனில் பேசும்போது சார் என்று அழைப்பேன். உடனே, அவர் மறுத்து சார் என்று அழைக்க வேண்டாம். ப்ரதர் என்று அழையுங்கள் என்று உரிமையுடன் கூறுவார். இந்தியா பாசிச கும்பலிடம் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அதனை காக்க வேண்டிய பெரும் கடமை உங்களிடம் இருக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அதனால், பா.ஜ.கவால் வெற்றி பெறமுடியவில்லை.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முழுவதும் தோல்வியைத் தழுவவுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம் தான். ஆனால், 63 சதவீதம் பேர் பா.ஜ.க வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். ஆனால், அவர்கள் கட்சிகளுக்கு பிரித்து அளித்துள்ளனர். அதனால், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பேற்று கூட்டணியை அமைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: