Home /News /tamil-nadu /

ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஆட்சிப் பணி விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள அறிவிப்பில், ‘சமீபத்தில் மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மத்திய, மாநில அரசுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒன்றிய அரசின் வசம் அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும் எனவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த மத்திய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கெனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவிவருகிறது. மத்திய குரூப் -1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்யும் முறை மூலமாகவும் மத்திய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில் மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாகத் தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைச் சார்ந்துள்ளது என்பதை முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளஃளார்.

    மக்களுக்கு தேவையான பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருவதையும் தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாநில அரசுக்கு தேவைப்படுவதையும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கெனவே போதுமான எண்ணிக்கைக் குறைபாடுள்ள நிலையில் நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்படுத்திவிடும். மேலும், மத்திய அரசு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறை மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பு அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கெனவே குறைத்துள்ளதை தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆட்சிப் பணி விதி திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்



    இந்த புதிய சட்டத்திருத்தமானது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சிப் பணி என்பதை சேதமடையச் செய்துவிடும் என்பதையும் இந்திய ஆட்சிப் பணி இதுவரை தேசத்துக்கு சிறப்பான சேவையாறி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்வதையும் குறிப்பிட்டுள்ளார்.


    உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்மந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்ற முடியும் எனும் நிலை இந்தியாவின் எஃகு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசுப் பணி நிர்வாகத்துக்கு ஒரு நிலையற்ற தன்மையையும் அலுவர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்குமென்று முதல்வர் தனது கடித்தத்தில குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு எஃகு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்கு சிந்தனையை நாம் நினைவுகூற வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

    மேற்கூறிய காரணங்கள் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி