தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி., வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்றும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களில் பா.ஜ.க ஆளும் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களைப் புறக்கணிப்பதா - பா.ஜ.கவுக்கு சீமான் கண்டனம்
அந்த கடிதத்தில், ‘குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.