அமைச்சர்களுக்கு மாவட்டங்கள்: ஆக்ஸிஜனை உறுதி செய்தல் - அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்

Youtube Video

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

    1. நமது மாநிலத்தில் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், நமது அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திய உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவேண்டும்.

    2.மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்தி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

    3.தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்த விதமான சூழலிலும் ஆக்ஸிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    4.சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    5.தகுதியுள்ள அனைத்து பயனாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கிய்த்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்படவேண்டும்.

    6.மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகர்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்யவேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: