தி.மு.க அறிக்கை கதாநாயகன்: அ.தி.மு.க அறிக்கை காமெடி வில்லன் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தி.மு.க அறிக்கை கதாநாயகன்: அ.தி.மு.க அறிக்கை காமெடி வில்லன் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்

தி.மு.க அறிக்கை கதாநாயகன்: அ.தி.மு.க அறிக்கை காமெடி வில்லன் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். மதுரை மாவட்ட புறநகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு முறை கிராம சபை கூட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆகிய பிரச்சாரங்களின் மூலம் வாக்கு சேகரித்து இருந்தார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக மதுரை தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கோமாளி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பாடம் புகட்ட தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க வெல்வதும், பா.ஜ.க வெல்வதும் ஒன்று தான். அ.தி.மு,க எம்.பி ரவீந்திரநாத், பா.ஜ.க எம்.பியாக செயல்பட்டு கொண்டு உள்ளார். ஒரு பா.ஜ.க உறுப்பினர் வந்தால் கூட அது நாட்டுக்கு மிக கேடு.

மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என 2016 இல் அறிவிக்கப்பட்டு அது கிடப்பில் உள்ளது. ஒரு செங்கல் கூட நகராமல் வீணாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்.

முதல்வரும், துணை முதல்வரும் அமைச்சர்களும் கோர்ட் போட்டுக் கொண்டு வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தார்கள். ஆனால், எந்த முதலீடும் இதுவரை கிடைக்கவில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வில்லன். வில்லன் என்றால் கூட கொஞ்சம் ரோஷம் இருக்கும். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை காமெடி வில்லன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஹெலிகாப்டர், ஏரோ பிளேன், ரயில் கூட தருவோம் என நாளை தேர்தல் அறிக்கை கொடுப்பார்கள் அதிமுகவினர்.

அனைவரும் மாஸ்க் அணியாமல் வெளியே வராதீர்கள். தடுப்பூசி பலன் தருகிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அண்ணனாக, தம்பியாக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். சென்னையிலுள்ள அண்ணா நூலகம் போல, மதுரையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: