• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு வெளியிடப்பட்ட நிலையில் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து, தற்போது பிராந்திய மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் , மலையாளம், தெலுங்கு, கொங்கணி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவும் நிலைவில், தற்போது அதன் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பைக் கூட தமிழில் வெளியிடாமல் புறக்கணித்திருக்கிறது பா.ஜ.க. அரசு. கடும் கண்டனங்கள். மொழி உணர்வு - மாணவர் எதிர்காலத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது. கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும், பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. உருது உள்ளிட்ட மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை. மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தி.மு.க உறுதியாக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘புதிய கல்விக்கொள்கையை 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, தமிழை மட்டும் திட்டமிட்டு புறக்கணித்துள்ளது. இந்தி-சமஸ்கிருத திணிப்பு, 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு, கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு என்ற சூழ்ச்சிகளும் - பிற்போக்குத்தனங்களுமே புதிய கல்வி கொள்கையாக வருகிறது. இதனால்தான் தி.மு.க உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், அறிவுசார் பெருமக்களும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர், எதிர்க்கின்றனர். புதிய கல்வி கொள்கையை தமிழில் வெளியிடாமல் மக்களை ஏமாற்றி, இதை கொல்லைப்புறம் வழியாக செயல்படுத்த நினைத்தால் ஆதிக்கவாதிகளே இறுதியில் ஏமாறுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: