சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: மானமுள்ள தி.மு.க பொறுக்காது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சி.பி.எஸ்.இ புத்தகத்தில் திருவள்ளுவர்

சி.பி.எஸ்.சி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2019-ம் ஆண்டு திருவள்ளுவர் புகைப்படத்துக்கு காவி உடை அணிவித்து, இந்து மதத் துறவி போன்ற புகைப்படம் பகிரப்பட்டது. பா.ஜ.கவின் இந்தச் செயலுக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அதனையடுத்து, பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் காவி உடையுடன் திருவள்ளுர் படம் பகிரப்பட்ட மறுதினமே தஞ்சாவூரிலுள்ள திருவள்ளூர் சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு பெயிண்டை ஊற்றினர். இந்தச் சம்பத்துக்கு தமிழகம் முழுவதுலுமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

  அதனையடுத்து, 2020-ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, துணை குடியரசுத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் அந்தப் படத்தை நீக்கிவிட்டு வெள்ளை உடை உடுத்திய திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்தார். இவ்வாறு காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.


  இந்தநிலையில், சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் புகைப்படத்தில் முடியற்று வலுக்கை தலையுடன் காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சி.பி.எஸ்.இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம். பா.ஜ.க அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: