தமிழக ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏக்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் என 133 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். அப்போது, திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினின் பெயரை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்.

  இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு துரைமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, துரைமுருகன் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

  இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், அங்கேயே கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ.ராசா, உள்ளிட்டோருடன் ஸ்டாலின் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

  இந்நிலையில், காலை 10 மணிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார். அப்போது, சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்க உள்ளார். மேலும், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கிறார்.

  இதையடுத்து, புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  Published by:Vijay R
  First published: